ஊட்டியில் பலத்த மழை

ஊட்டியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-04-21 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பலத்த மழை

தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவானது. இந்தநிலையில் தென் இந்திய பகுதிகளில் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 21, 22-ந் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலையில் ஊட்டி நகரில் வெயில் அடித்தது. பின்னர் 11 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து மதியம் 12 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மதியம் 2 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் பலத்த மழையாக பெய்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கு ஒதுங்கி நின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

பலத்த மழையால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் பூங்காவை கண்டு ரசித்தனர். மேலும் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக நன்றாக வெயில் அடித்தது. தற்போது கோடை மழை திடீரென பெய்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. இதே போல் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 65 சதவீதமாக இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கோடை மழை 521 மில்லி மீட்டர் பெய்து உள்ளது. கோடை மழை காரணமாக ஊட்டியில் இதமான காலநிலை நிலவுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்