மடத்துக்குளம் பகுதியில் தொடரும் கனமழை

மடத்துக்குளம் பகுதியில் தொடரும் கனமழை

Update: 2023-05-23 15:57 GMT

போடிப்பட்டி, மே.24-

மடத்துக்குளம் பகுதியில் தொடரும் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர் சேதம்

மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டி, ரெட்டிபாளையம், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் சூறாவளிக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் நூற்றுக்கணக்கான தென்னை, பப்பாளி, முருங்கை மரங்கள், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் சேதமடைந்தன. சேதங்கள் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்துள்ள நிலையில் தோட்டக்கலைத்துறையினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பயிர் காப்பீடு செய்யாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்ற தவிப்பில் விவசாயிகள் உள்ளனர்.அதேநேரத்தில் பயிர்க் காப்பீடு செய்திருந்தாலும் பிர்கா அளவில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்ற சூழல் உள்ளதால் இழப்பீடு கிடைக்குமா? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

இழப்பீடு கிடைக்குமா?

இந்தநிலையில் மீண்டும் மீண்டும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து பயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-பகலில் நல்ல வெயில் அடித்த நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி, மின்னலுடன் ஆலங்கட்டிகளுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அத்துடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் விளைநிலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் வரப்புகள் பெருமளவு சேதமடைந்துள்ளது. அறுவடை நிலையிலிருந்த மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது.

மேலும் தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் மழையால் கடும் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்