கோத்தகிரி பகுதியில் பலத்த மழை: 300 மீட்டர் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

இதே போல இந்த சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தன.

Update: 2023-11-23 09:51 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில்,

கோத்தகிரி பகுதியில் பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மாமரம், முள்ளூர் ஆகிய பகுதிகளில் ராட்சத காட்டு மரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.

இதே போல கேர்பெட்டா பிரிவு பகுதியிலும் மரம் சரிந்து விழுந்ததால், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல இந்த சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தன. மேலும் குஞ்சப்பனையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சேறும் சகதியுடன் காட்டாறு போல மழை நீர் வழிந்தோடியதுடன், அதில் மரத்துண்டுகளும் அடித்துச் செல்லப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அவ்வழியாக அரசு பஸ்சில் சென்றவர்கள் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், தங்களுக்கு உதவுமாறு கேட்டு பதிவிட்ட வீடியோ வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த ரோந்து பணி போலீசார் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மண்ணை அகற்றி, மரங்களை மின் வாளால் துண்டு துண்டாக வெட்டி, பொக்லைன் இயந்திரத்துடன் உதவியுடன் மரங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், சாலையில் விழுந்து கிடக்கும் பாறை மற்றும் மண்சிறிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி போக்குவரத்தை சீர் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்து தடைபட்டு, வாகனங்கள் குன்னூர் வழியாக சென்றன. இதே போல கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டத்திலிருந்து மெட்டுக்கல் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் தார் சாலையின் சுமார் 300 மீட்டர் நீளமுள்ள சாலை மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால் அந்த கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

சாலை துண்டிப்பால் கரிக்கையூர் மற்றும் மெட்டுக்கல் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதனிடையே கனமழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் எனவும்

கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் வருவாய் துறை, தீயணைப்பு துறையினர் 30 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியுள்ளார். மேலும் 10 ஜேசிபி இயந்திரங்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்