கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் நீர்நிலைகள் வறண்டதுடன், காய்கறி பயிர்கள் வாடின. மேலும் பனிப்பொழிவால் கருகிப்போன தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்புவதற்கு கோடை மழை பெய்யுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான சீதோஷ்ண காலநிலை நிலவியது. மழையின் காரணமாக காய்கறி மற்றும் தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. மேலும் தேயிலை மகசூல் அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். கோத்தகிரியில் 14 மில்லி மீட்டர் மழை பதிவானது.