கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பலத்த மழை
வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் நேற்றுமுன் தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்றும் தொடர்ந்து பெய்தது. அப்போது குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், வயல்களிலும் மழைநீர் தேங்கி நின்றது.
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின
இந்த மழையால் கூத்தாநல்லூர் பகுதியில் சில இடங்களிலும், வடபாதிமங்கலம் பகுதியில் வடபாதிமங்கலம், உச்சுவாடி, சோலாட்சி, கிளியனூர், மாயனூர், பூசங்குடி, ஓகைப்பேரையூர், புனவாசல், ராமநாதபுரம், பெரியகொத்தூர், பழையனூர், பூந்தாழங்குடி, ஓவர்ச்சேரி, கோரையாறு, குலமாணிக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சில இடங்களிலும் வயல்களில் மழைநீர் தேங்கி சம்பா- தாளடி நடவு பயிர்கள் மூழ்கின. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்தனர். வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார்குடி
இதேபோல் மன்னார்குடி மற்றும் பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், கண்டிதம்பேட்டை, சுந்தரகோட்டை, பைங்காநாடு, சேரன் குளம், பாமணி, மூவாநல்லூர், மேலவாசல், காரிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் மழை தொடர்ந்தால் சம்பா நெற்பயிர் மழை நீரால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.