கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை கொடைக்கானலில் வெயில் அடித்தது. இதனால் இயல்புநிலை திரும்பியது. இருப்பினும் மதியம் 3 மணி முதல் மாலை 6 வரை இடி-மின்னலுடன் மீண்டும் பலத்த மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோழா அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். மாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு சென்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மாலை நேரத்திலேயே கடும் குளிர் நிலவி வருகிறது. அத்துடன் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.