காரைக்குடி பகுதியில் கனமழை
காரைக்குடி பகுதியில் பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியில் பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
கனமழை
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்றும் காலை வழக்கம் போல வெயில் அடித்தது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் மாலை 4.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல கனமழை பெய்தது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மரங்கள் சாய்ந்தன
இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரின் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் கனமழை காரணமாக ஆங்காங்கே சில மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோட்டையூர், புதுவயல், கண்டனூர், குன்றக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக காரைக்குடி பகுதியில் பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.