அதிராம்பட்டினத்தில், கொட்டித்தீர்த்த கனமழை
அதிராம்பட்டினத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் உப்பளங்களில தண்ணீ்ர் தேங்கியது.
அதிராம்பட்டினம்,
அதிராம்பட்டினத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் உப்பளங்களில தண்ணீ்ர் தேங்கியது.
மழைநீர் சூழ்ந்தது
அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் என பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இரவு 9 மணிக்கு லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடி- மின்னலுடன் கனமழையாக பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. இரவு முழுவதும் பெய்த மழை நேற்று காலை 7 மணி வரை நீடித்ததால் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையம், கடலோர காவல் நிலையம், பஸ் நிலையம், கால்நடை மருத்துவமனை, சுப்பிரமணியர் கோவில் தெரு குடியிருப்பு பகுதிகள், உப்பளங்கள் என பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.
நாட்டுப்படகு மீனவர்கள்
விடிய விடிய பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் விடிய விடிய பெய்த பலத்த மழையால் தற்போது ஏரி, குளங்களில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் அதிகாலை மீன்பிடிக்க செல்ல வேண்டிய நாட்டுப்படகு மீனவர்கள் கனமழையால் மீன்பிடிக்க செல்லவில்லை.
உப்பு உற்பத்தி
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டெரித்த வெயில் காரணமாக அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கனமழையினால் உப்பளங்களில் மழை நீர் தேங்கிய தோடு வாரப்பட்ட உப்புகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலத்தை தவிர பிற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மழையை எதிர்பாா்த்து இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு திருச்சிற்றம்பலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பத்தின்தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.