சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்

தொடர் கனமழை காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 4 அடிக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

Update: 2023-12-04 01:12 GMT

சென்னை,

வங்கக்கடலில் வலுப்பெற்ற `மிக்ஜம்' புயல், இன்று அதிகாலை நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே - தென் கிழக்கே 150 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்தது.

புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 4 அடிக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரங்கிமலை ரெயில்நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ரெயில் நிலையம் மூடப்படுவதாக மெட்ரோ ரெயில்நிலையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும், பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரெயில்நிலையம் சென்று பயணம் மேற்கொள்ள மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்