அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து இடி- மின்னல் தோன்றின. ஆனால் மழை பெய்யவில்லை. நேற்று வழக்கம் போல் பகலில் கடுமையான வெயில் அடித்தது. மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதையடுத்து, அரியலூர் நகரில் மாலை 6 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 9 மணி வரை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் சென்றது. நகராட்சி சார்பில் சிமெண்டு சாலை போட்ட போது மிகவும் உயரமாக அமைக்கப்பட்டதால் பல வீடுகள் பள்ளத்தில் உள்ளன. பல இடங்களில் கழிவு நீர், பாதாள சாக்கடை குழாயில் இருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் மழைநீர் பல தெருக்களில் தாழ்வாக உள்ள வீடுகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.