குமரியில் தொடர்கிறது சாரல் மழை சிற்றார்-2 அணைப்பகுதியில் 32.4 மி.மீ. பதிவு

குமரியில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக சிற்றார்-2 அணைப்பகுதியில் 32.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் கோடை வெயிலின் வெப்பத்தால் தவித்த மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

Update: 2023-07-04 18:26 GMT

நாகர்கோவில்:

குமரியில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக சிற்றார்-2 அணைப்பகுதியில் 32.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் கோடை வெயிலின் வெப்பத்தால் தவித்த மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

சாரல் மழை

குமரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை வெயில் கடுமையாக கொளுத்தியது. இதனால் மக்கள் தாங்க முடியாத வெப்பத்தால் தவித்து வந்தனர். ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழையும் பெய்யவில்லை.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக குமரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது.

அதே சமயம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின்வேகமாறுபாடு காரணமாக தமிழத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதைத்தொடர்்ந்து நேற்று அதிகாலையில் இருந்து நாகர்கோவில் நகரிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதே மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.

குளிர்ச்சி

பெரிய மழையாக இல்லாமல் நாள் முழுவதும் தூறலாக மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பள்ளி- கல்லூரிகளுக்கு சென்ற மாணவ- மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்ற ஊழியர்கள் குடைகளை பிடித்தபடியும், மழைகோட் அணிந்த படியும் சென்றதை காண முடிந்தது. இதுவரை கடுமையான கோடை வெயிலின் உக்கிரத்தில் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை ஆறுதலாக அமைந்துள்ளது. நேற்று காலையில் இருந்து மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் ஜில்லென்ற சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

மழை அளவு

பேச்சிப்பாறை அணை- 23.4, பெருஞ்சாணி அணை- 9.6, புத்தன் அணை- 8.8, சிற்றார்-1 அணை- 26, சிற்றார்-2 அணை-32.4, மாம்பழத்துறையாறு அணை- 3, முக்கடல்- 4.6, பூதப்பாண்டி- 7.2, கன்னிமார்- 9.6, குழித்துறை- 2, மயிலாடி- 1.6, நாகர்கோவில்- 1.2, சுருளக்கோடு- 9.2, தக்கலை- 5, குளச்சல்- 1.2, இரணியல்- 2, பாலமோர்- 18.6, திற்பரப்பு- 9.6, ஆரல்வாய்மொழி- 1, அடையாமடை- 7.2, முள்ளங்கினாவிளை- 4.6, ஆனைக்கிடங்கு- 1.2 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.

இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 603 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 641 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 103 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 31 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 45 கன அடி தண்ணீரும் வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகளும், மரங்களும் முறிந்து வருகின்றன. நேற்று நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகில் நின்ற தென்னை மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்