இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்ய தொடங்கியது. இந்த கனமழையால் வாள்மேல் நடந்த அம்மன் கோவில், சாலையூர், இளையான்குடி கண்மாய்க்கரை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். வாள்மேல் நடந்த அம்மன் கோவில் பகுதிகளில் கோவிலை சுற்றிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கியது. கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் வெளியேற்றும் வடிகால் பகுதிகளை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல பேரூராட்சி பகுதிகளில் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பேரூராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.