2-வது நாளாக இடி, மின்னலுடன் கனமழை

காரைக்குடி பகுதியில் கடந்த 2-வது நாளாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-06-11 18:45 GMT

காரைக்குடி பகுதியில் கடந்த 2-வது நாளாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பலத்த மழை

கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த 29-ந் தேதியுடன் கத்திரி வெயில் தாக்கம் நிறைவு பெற்றது. இருப்பினும் தமிழகத்தில் வெயில் தாக்கம் குறையாததால் கடந்த 3-ந்தேதி பள்ளிகள் திறக்க வேண்டிய நிலையில் அது தள்ளிவைக்கப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடைகாலம் முடிந்த நிலையில் பல்வேறு இடங்களில் காலை 10 மணி முதல் வெப்பம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வழக்கம் போல் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென மழை பெய்தது. இந்த கனமழையால் ஆங்காங்கே ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி துறை சார்பில் நகர் மன்ற தலைவர் முத்துதுரை தலைமையில் கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சில மரங்கள் வேரோடு மின் வயரில் விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து இரவு முழுவதும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின்வயரில் விழுந்த மரங்களை அகற்றி மின்சப்ளை கொடுத்த பின்னர் மீண்டும் அதிகாலை 5 மணிக்கு பல்வேறு இடங்களில் மின்வினியோகம் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

நேற்றும் 2-வது நாளாக காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. பகலில் வழக்கம் போல வெயில் அடித்தது. பின்னர் மாலை 5 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து பலத்த இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.

இதன் காரணமாக நகரில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றது. சாலையில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர்ந்து 2-வது நாளாக காரைக்குடி பகுதியில் மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்