திடீர் கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சையில் நேற்று பெய்த திடீர் கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2022-12-12 19:43 GMT

தஞ்சையில் நேற்று பெய்த திடீர் கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. தொடக்கத்தில் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தது. அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்டது. பின்னர் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் தாக்கத்தினால் டெல்டா மாவட்டங்களில் மழை அதிகம் பெய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் கரையை கடந்த பிறகும் லேசான முதல் மிதமான மழையே பெய்தது.

இந்த நிலையில் தஞ்சையில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுவதால் மழையின் தாக்கம் குறைந்துவிட்டது என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் தஞ்சையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

கனமழை

தஞ்சையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பனிப்பொழிவுடன், குளிர் காற்றும் வீசியபடி இருந்து வந்தது. அவ்வப்போது விட்டு, விட்டு லேசான சாரல் மழையும் பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 12.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கு மேல் இடைவிடாது கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக ரெயில்வே கீழ்ப்பாலம், அண்ணாசிலை, பழைய கோர்ட்டு சாலை உள்ளி்ட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நி்ன்றது. திடீரென பெய்த இந்த கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சென்றனர்.

இயல்பு நிலை பாதிப்பு

மேலும், பெண்கள் நனைந்தபடி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் நடந்து சென்றனர். ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள், பஸ் பயணிகள் நீண்ட நேரமாக சாலையோர கடைகள், பயணிகள் நிழலகங்களிலும், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

இடைவிடாது பெய்த மழையினால் காந்திஜி சாலை, ரெயிலடி அருகே உள்ள சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்