விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தீவிர வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.
விழுப்புரம்:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு உறுதி செய்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு அந்த அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
விழுப்புரத்தில் பலத்த பாதுகாப்பு
அதன்படி விழுப்புரம் நகரில் இன்று மாலை 3 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் நான்குமுனை சந்திப்பு, சென்னை நெடுஞ்சாலை, பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், காமராஜர் வீதி, திரு.வி.க. வீதி, காந்தி சிலை, நேருஜி சாலை வழியாக பழைய பஸ் நிலையத்தில் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.
விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுவதையொட்டி இந்த ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறவும், ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தீவிர வெடிகுண்டு சோதனை
இதனிடையே நேற்று மாலை முதல் நகரின் முக்கிய இடங்களான பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கடைவீதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் ஊர்வலம் செல்லும் இடங்கள், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் ராணி மூலம் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.