விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-08-11 18:45 GMT

விழுப்புரம்

சுதந்திர தின விழா

நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு, காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மேரி, போலீசார் மணிகண்டன், கிருஷ்ணராஜ், மீனா, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிலோமின்ராஜ், நாகராஜ், ஏட்டு சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர சோதனை

இவர்கள் ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகில், பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், போலீஸ் மோப்ப நாய் லக்கியை கொண்டும் கடும் சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரெயில் நிலைய பகுதி முழுவதும் நவீன கருவிகள் மூலம் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர ரெயில் நிலையத்துக்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் ரெயில்வே தண்டவாளங்களையும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்