7-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்:ரூ.700 கோடி மதிப்புள்ள சரக்குகள் குடோன்களில் தேக்கம்
7-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: ரூ.700 கோடி மதிப்புள்ள சரக்குகள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.
ஈரோட்டில் 7-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.700 கோடி மதிப்பிலான சரக்குகள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளது.
வேலை நிறுத்தம்
ஈரோட்டில் உள்ள லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள், கூலி உயர்வு கேட்டும், இரவு வேலை செய்தால் சாப்பாட்டுக்கு ரூ.75 தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் சரக்கு லாரி புக்கிங் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு தரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை அமைச்சரிடம் தெரிவித்தனர். இருதரப்பு விவரங்களையும் கேட்டறிந்த பிறகு லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் தரப்பில் 6 பேரும், தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் 6 பேரும் பொது நபராக ஒரு வக்கீலும் என 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் இந்த குழுவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
ரூ.700 கோடி...
ஆனால் நேற்று எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெரிகிறது. இதனால் 7-வது நாளாக நேற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேக்கம் அடைந்து காணப்படுகிறது.
கிட்டத்தட்ட ரூ.700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்து கிடப்பதால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதி அடைந்துள்ளனர். பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு காண வேண்டும் என்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.