வால்பாறை மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் -வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல போலீசார் அறிவுறுத்தல்
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல போலீசார் அறிவுறுத்தி உள்ளார்கள்.;
வால்பாறை
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல போலீசார் அறிவுறுத்தி உள்ளார்கள்.
பனிமூட்டம்
வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. ஆனால் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழையும், ஒரு சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வால்பாறை பகுதி முழுவதும் பகல் மற்றும் இரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை வட்டார பகுதி முழுவதும் கடுமையான குளிரும் பனிமூட்டமும் நிலவி வருகிறது.
இயற்கை அழகை ரசிப்பு
பட்டப்பகலில் வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் தங்களில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.
குறிப்பாக கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் அதிகளவிலான பனிமூட்டம் இருந்து வருகிறது. சமவெளிப் பகுதியில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் சுற்றுலா பயணிகள் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் நிலவும் பனிமூட்டத்தில் இறங்கி பனிமூட்டத்தின் நடுவே நின்று இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர்.
போலீசார் அறிவுரை
பகல் நேரத்திலேயே மலைப்பாதை சாலையில் பனிமூட்டம் நிலவி வருவதால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பனிமூட்டம் உள்ள இடங்களில் கவனமாகவும் முகப்பு விளக்கை எரியச் செய்தும் குறைந்த வேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.