தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் 18 மாவட்டங்கள் எவை..? எச்சரிக்கும் வானிலை மையம்
இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
அந்தவகையில் நேற்று முன்தினம் சேலத்தில் 108 டிகிரியும், அதற்கு முந்தைய நாள் ஈரோட்டில் 109 டிகிரியும் என வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. இது மேலும் வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர்.
இதில் இன்று (வியாழக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பொதுவாக வானிலை ஆய்வு மையம் வெயிலின் அளவை செல்சியஸ் என்ற அளவிலேயே குறிப்பிடுகிறது. அதனை 'பாரன்ஹீட் டிகிரி' என்ற அளவில் மாற்றுகிறோம். அந்த வகையில் மேற்சொன்ன செல்சியஸ் அளவின் படி பார்க்கும் போது, இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருக்கும்.
அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.