செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்.,11-ந் தேதி விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வரும் திங்கட் கிழமை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.;
சென்னை,
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்தது
இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அதன்பிறகு நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
மேலும், சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமீன் கோர முடியாது என்றும், ஜாமீன் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் விசாரிக்க மறுத்தது.
இந்த சூழலில் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு திங்கட்கிழமை (04.09.2023) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்தனர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லியிடம் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 11-ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 123வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.