குவியல், குவியலாக வெடிபொருட்கள் பறிமுதல்
காரமடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்கள் குவியல், குவியலாக பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.;
காரமடை,
காரமடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்கள் குவியல், குவியலாக பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெட்டனேட்டர்கள்
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திலக் மற்றும் போலீசார் காரமடை பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாலை 5 மணியளவில் காரமடை கண்ணார்பாளையம் அருகில் சாலையோரம் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் டெட்டனேட்டர்கள் (வெடிபொருள்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
்கேரளாவில் விற்பனை
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தினேஷ் (வயது 23), ஆனந்த் (25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (41), திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பது தெரியவந்தது.
அவர்கள் பழைய கட்டிடங்களை தகர்த்து கொடுக்கும் வேலை செய்து வரும் காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வந்து உள்ளனர். பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடிபொருட்களை எந்தவித அனுமதியின்றியும் பயன்படுத்தி வந்து உள்ளனர். மேலும் எலெக்ட்ரிக்கல் டெட்டனேட்டர்களை கேரளாவில் கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.
8 பேர் கைது
இந்த வெடிபொருட்களை சிறுமுகையை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால், காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரிடம் இருந்து வாங்கி உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தினேஷ், ஆனந்த், சுரேஷ்குமார், செந்தில்குமார், ரங்கராஜ், ேகாபால், பெருமாள், சந்திரசேகரன் ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,244 எலெக்ட்ரிக்கல் டெட்டனேட்டர்கள், 622 ஜெலட்டின் குச்சிகள் குவியல், குவியலாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பல் சதிவேலை செய்யும் கும்பல்களுக்கு ஏதும் விற்று உள்ளதா? கேரளாவில் பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்து உள்ளனரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.