ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் உடல்நல பூங்கா; போலீஸ் ஜ.ஜி. அஸ்ரா கார்க் திறந்து வைத்தார்
பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உடல்நல பூங்காவை போலீஸ் ஜ.ஜி. அஸ்ரா கார்க் திறந்து வைத்தார்.
பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உடல்நல பூங்காவை போலீஸ் ஜ.ஜி. அஸ்ரா கார்க் திறந்து வைத்தார்.
ஆலோசனை
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (நெல்லை), பாலாஜி சரவணன் (தூத்துக்குடி) ஆகியோர் முன்னிலையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்,
புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகள், நிறைவேற்றப்பட வேண்டிய பிடியாணைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சாலை விபத்துகளை குறைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அறிவுரை வழங்கினார்.
போலீசாருக்கு வெகுமதி
மேலும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்வது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்.
இதைத்தொடர்ந்து ஐ.ஜி.அஸ்ரா கார்க் பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள உடல்நல பூங்காவை திறந்து வைத்து காவலர்களின் குடும்பத்தாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.