தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும், செங்குத்து பதவி உயர்வு முறையை நடைமுறைப்படுத்தி பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேவியர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரத்தினசாமி வரவேற்றார். மாநில தலைவர் தங்கமணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பழனி, ரவி, மாநில துணைத்தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் ரகு, மகளிரணி செயலாளர் இளமதி, மாவட்ட துணைத்தலைவர்கள் உதயசூரியன், சுசீலா, இணை செயலாளர்கள் ஏ.ஆனந்தன், எம்.ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜோசப்எட்வின் நன்றி கூறினார்.