வேங்கைவயல் கிராமத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 95 பேர் கைது
அசுத்தம் செய்யப்பட்ட குடிநீர் தொட்டியை அகற்றக்கோரி வேங்கைவயல் கிராமத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 95 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகளை கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வேங்கைவயல் பகுதியில் அசுத்தம் கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தீண்டாமையின் அடையாளமாக இருப்பதால் அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இந்த இழிவான செயலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேங்கைவயல் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து சத்தியமங்கலம், வெள்ளனூர், இறையூர், வேங்கைவயல் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் போராட்டம் அறிவித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கையில் கொடியுடன் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து வேங்கைவயல் நோக்கி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளதால் அதை அகற்றினால் சாட்சி இருக்காது என்றும், அந்த தொட்டி அரசு சார்பில் அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 95 பேரை போலீசார் கைது செய்தனர்.