ஆசிரியையிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியகருவூல கணக்கருக்கு 2 ஆண்டு ஜெயில்
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கருவூல கணக்கருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் புதன்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கருவூல கணக்கருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
ஓய்வு பெற்ற ஆசிரியை
தூத்துக்குடி வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 56). இவரது தாய் மெட்டில்டா. ஒய்வு பெற்ற ஆசிரியை. கடந்த 2006-ம் ஆண்டு இவருக்கு ஓய்வூதியம் நிலுவைத் தொகை ரூ.80 ஆயிரம் வந்துள்ளது. இதனை கருவூலத்தில் இருந்து பெறுவதற்காக மெட்டில்டா விண்ணப்பித்து உள்ளார். அப்போது, அங்கு உதவியாளர் மற்றும் கணக்காளராக பணியாற்றிய தூத்துக்குடியை சேர்ந்த லட்சுமிநாராயணயன் என்பவர் பணத்தை கொடுப்பதற்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து மைக்கேல்ராஜ் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 8.8.2006 அன்று மைக்கேல்ராஜ் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை லஞ்சமாக லட்சுமிநாராயணனிடம் கொடுத்தார். அப்போது, மறைந்து இருந்த போலீசார் லட்சுமிநாராயணனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
2 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், குற்றம் சாட்டப்பட்ட கருவூல கணக்கர் லட்சுமிநாராயணனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜென்சி ஆஜர் ஆனார்.