ஆறுமுகநேரியில் வியாபாரி வீட்டில் திருடிய வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்

ஆறுமுகநேரியில் வியாபாரி வீட்டில் திருடிய வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-10-21 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் வியாபாரி வீட்டில் பணம், செல்போன் திருடிய வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வியாபாரி வீட்டில் திருட்டு

ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சடையாண்டி மகன் வீமன் (வயது 49). வியாபாரி.

இவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் வழக்கம் போல் ஐஸ் வியாபாரத்திற்கு சென்று விட்டு நேற்று முந்தினம் இரவு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் ரூ.3 ஆயிரத்து 500 பணம், செல்போனை வீட்டிலுள்ள அறையில் ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு தூங்கி உள்ளார்.

அதிகாலை 2 மணி அளவில் பாரதி நகரைச் சேர்ந்த விமல சேகரன் மகன் சக்திவேல்(26) என்பவர், ஜன்னல் வழியாக பணம், செல்போனை எடுத்து ஓடியுள்ளார். அப்போது சத்தம் கேட்டு கண் விழித்த அவர் சக்திவேலை துரத்தி ெசன்றுள்ளார். ஆனால் அவர் இருளில் தப்பி ஓடிவிட்டாராம்.

மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்

இந்நிலையில் நேற்று காலையில் ஆறுமுகநேரி பாரதி நகர் பிள்ளையார் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து, அவரை கோவில் மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தார்.

3 பேருக்கு வலைவீச்சு

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சக்திவேல் தான் கூலி வேலை செய்து வருவதாகவும், தன்னை பாரதி நகர் பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது வடக்கு சுப்பிரமணிய புரதத்தை சேர்ந்த வீமன் மகன் ஆத்திமுத்து (32), ஜான்ஸன் மகன் ஜெயபிரகாஷ், சிங்கராஜ் மகன் பிரபு ஆகியோர் தன்னை அடித்து கோவில் தூணில் கட்டி வைத்து தாக்கியதாகவும், பின்னர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் என்று புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்