போலீஸ் போல் நடித்து வியாபாரியிடம் 30 பவுன் நகை பறிப்பு
கோவை விமானம் நிலையம் அருகே போலீஸ் போல் நடித்து, 30 பவுன் நகையை பறித்துச்சென்ற 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பீளமேடு
கோவை விமானம் நிலையம் அருகே போலீஸ் போல் நடித்து, 30 பவுன் நகையை பறித்துச்சென்ற 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
வியாபாரி
திருச்சி சமயபுரம், ரகுபதி காலனியை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (வயது 47). வியாபாரி. இவர் திருச்சியில் இருந்து கோவை வந்தார். நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கோவை வந்த நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு பார்சலை வாங்கினார். அதில் 6 தங்க சங்கிலிகள் என மொத்தம் 30 பவுன் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்துல் ரசாக் அந்த பார்சலுடன் விமானநிலையம் அருகே இரவு 11.15 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென போலீஸ் உடையில் வந்த 3 பேர் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காரில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
30 பவுன் நகை பறிப்பு
இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல்ரசாக் அவர்களுடன் காரில் ஏறினார். கார் கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்றது. அப்போது போலீஸ் உடையில் இருந்த 3 பேரும் அவரிடம் இருந்த பார்சலை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
அப்போது அவர்கள் திடீரென கொன்று விடுவதாக மிரட்டி, 30 பவுன் தங்க நகைகள் உள்ள பார்சலை பறித்துக்கொண்டனர். பின்னர் அப்துல் ரசாக்கை கொச்சி-சேலம் சாலையில் காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர்.
3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
இதனால் செய்வது அறியாமல் திகைத்து நின்ற அப்துல்ரசாக் நடந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் விமான நிலைய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அப்துல் ரசாக் தங்க நகை பார்சலை கொண்டு வருவதை நோட்டமிட்டு, 3 பேர் கும்பல் இந்த கைவரிசை காட்டியுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.