வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த தொழிலாளி கைது
கம்பம் அருகே, வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தொழிலாளிவீட்டில் சோதனை
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வம். அவருடைய மகன் இந்திரஜித் (வயது 28). கூலித்தொழிலாளி.
இவர் தனது வீட்டில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை விற்பனை செய்ய அவர் முயற்சிப்பதாகவும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
துப்பாக்கி பறிமுதல்
அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார், இந்திரஜித் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டுக்குள் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்தது. ஆனால் அதற்கு அவரிடம் உரிமம் எதுவும் இல்லை. இதனையடுத்து அந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்திரஜித் மற்றும் நாட்டுத்துப்பாக்கியை ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
வனவிலங்குகள் வேட்டை
விசாரணையில் மேகமலை வனப்பகுதி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் இரவு நேரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு இந்த துப்பாக்கியை பயன்படுத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
தற்போது அந்த துப்பாக்கியை விற்பனை செய்யும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரஜித்தை கைதுசெய்தனர்.
இதற்கிடையே அந்த துப்பாக்கியை வேறு யாரிடம் இருந்தும் இந்திரஜித் வாங்கினாரா? அல்லது அவரே துப்பாக்கியை தயாரித்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.