பூட்டுலேயே சாவியை மறந்து வைத்து சென்றதால் வீடு புகுந்து தங்க மோதிரம், வெள்ளி திருட்டு
பூட்டுலேயே சாவியை மறந்து வைத்து சென்றதால் வீடு புகுந்து தங்க மோதிரம் மற்றும் வெள்ளியை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
சென்னை திருவொற்றியூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா. இவர், திருவொற்றியூர் பூந்தோட்ட சாலையில் உள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சாவியை மறந்துபோய் பூட்டுலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த அரைபவுன் தங்கமோதிரம், அரை கிலோ வெள்ளி மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது.
சாவியை பூட்டிலேயே மறந்துவிட்டு சென்றதால் மர்மநபர்கள், சாவி மூலம் கதவை திறந்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.