வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் வந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் வந்து பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-11-17 18:45 GMT

வாடகைக்கு வீடு கேட்டு...

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சுதேசிநேசன். இவருக்கு தமிழ்செல்வி(வயது 36) என்ற மனைவியும், தேசிகா(17) என்ற மகளும், 2 வயதில் கவின்ராஜ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. சுதேசிநேசன் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தமிழ்செல்வி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் அணுகு சாலையில் தனியார் ஐ.டி.ஐ. பின்புறத்தில் உள்ள சொந்த வீட்டில் முதல் தளத்தில் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மேலும் தரைத்தளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விடுவதற்காக வைத்திருந்தார். ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வியின் வீட்டிற்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வந்து பெரம்பலூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். அப்போது தமிழ்செல்வி 15 நாட்கள் கழித்து வருமாறு வாடகைக்கு வீடு கேட்டு வந்தவரிடம் கூறி அவரை அனுப்பி வைத்துள்ளார்.

தாலி சங்கிலி பறிப்பு

இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் அதே நபர் மொபட்டில் தமிழ்செல்வியின் வீட்டிற்கு வந்து தரைத்தளத்தில் உள்ள வீட்டை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி தமிழ்செல்வி தனது ஆண் குழந்தையுடன் கீழே இறங்கி தரைத்தளத்தில் உள்ள வீட்டை அவருக்கு காண்பித்து கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் திடீரென்று தமிழ்செல்வியை பிடித்து தலையை சுவற்றில் இடித்து கீழே தள்ளினார். பின்னர் அந்த நபர் தமிழ்செல்வியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மொபட்டில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

காயம்

இதில் தமிழ்செல்விக்கு தலையின் முன்பகுதியில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்செல்வி நடந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் துறைமங்கலம் மூன்று ரோடு, பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்