கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்தஅதிகாரிகளை, சலவை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை, சலவை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-15 18:45 GMT

மதுரை கூட்டுக்குடிநீர்

முல்லைப்பெரியாற்று தண்ணீரை மதுரைக்கு குழாய் மூலம் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு கூடலூர் அருகே குருவனூற்றுப்பாலம் வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இங்கு தடுப்பணை கட்டினால் தண்ணீரை தேக்கி வைத்து துணிகளை துவைக்க முடியாது என்று சலவை தொழிலாளர்கள் கூறினர்.

மேலும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் தங்களுக்கு பாதையை அகலப்படுத்தி கொடுக்க வேண்டும், படித்துறை கட்டித் தரவேண்டும், கட்டிடத்திற்கு மின்சாரம் அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை அதிகாரிகளிடம் அவர்கள் முன் வைத்தனர். அப்போது அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் கூறினர்.

முற்றுகை

இந்நிலையில் நேற்று லோயர்கேம்பில் நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை மதுரை மாநகராட்சி பொறியாளர் அரசு தலைமையில், மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர். அப்போது அங்கு சலவை தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் வந்தனர். அவர்கள் அதிகாரிகள் எங்களுக்கு உறுதியளித்த கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை. அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் பேசிய அதிகாரிகள் தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து சலவை தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் அதிகாரிகள் குழுவினர் பணிகளை ஆய்வு செய்துவிட்டு திரும்பினர். கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை பார்வையிட வந்த அதிகாரிகளை, சலவைத்தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்