கடைக்குள் புகுந்து பெண்ணை தாக்கி பொருட்கள் கொள்ளை
புத்தளம் அருகே பட்டப்பகலில் பெண்ணை தாக்கி பொருட்களை கொள்ளையடித்த ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர்:
புத்தளம் அருகே பட்டப்பகலில் பெண்ணை தாக்கி பொருட்களை கொள்ளையடித்த ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பர்னிச்சர் கடை
புத்தளம் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் அந்த பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
மணிவண்ணன் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் ஓய்வு எடுப்பார். அப்போது அவரது மனைவி சுதந்திரவள்ளி (வயது 50) கடையில் இருப்பது வழக்கம்.
பொருட்கள் கொள்ளை
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுதந்திரவள்ளி கடையில் இருந்தார். அப்போது பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த சுரேஷ் (34), வடக்கு கண்ணகுறிச்சியை சேர்ந்த ரெஜி என்ற ரெஞ்சித் (28), திசையன்விளையை சேர்ந்த ராமசாமி (54), ஒசரவிளையை சேர்ந்த பரமசிவம் (44) ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் திடீெரன கடைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கம்பியால் சுதந்திரவள்ளியை தாக்க முயன்றனர். உடனே சுதந்திரவள்ளி தனது கணவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும் 4 பேரும் சேர்ந்து சுதந்திரவள்ளியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் 4 பேரும் கடையில் இருந்த மிக்சி, பிளாஸ்டிக் நாற்காலி, மின்சார அடுப்பு மற்றும் மேஜையில் இருந்த ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
4 பேர் கைது
பின்னர் இதுகுறித்து சுதந்திரவள்ளி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் உள்பட 4 பேரை கைது செய்தனர். ேமலும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் மிக்சி உள்ளிட்ட பொருட்கள், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட சுரேஷ், ராமசாமி ஆகிய 2 பேர் மீதும் சுசீந்திரம், ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதும், ரவுடி பட்டியலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.