வயலில் எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி

வயலில் எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி

Update: 2022-09-30 20:03 GMT

தஞ்சை அருகே வயலில் எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி நடைபெற்றது.

குறுவை அறுவடை பணிகள்

தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், பூதலூர் உள்பட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மழைநீரில் வயலில் சாய்ந்தது. தண்ணீர் வடிந்த நிலையில் தற்போது குறுவை அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோலை ஒன்று சேர்த்து சுருட்டும் எந்திரங்களையும் வரவழைத்து வைக்கோல் சேகரிக்கப்படுகிறது. இப்படி சுருள் வடிவில் சேகரிக்கப்படும் வைக்கோல் பிற மாவட்டங்களுக்கு விற்கப்பட்டு வாகனங்கள் வாயிலாக அனுப்பப்படுகிறது. கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் மட்டும் வைக்கோல் சுருள்களை வீடுகளுக்கு எடுத்துச்செல்கின்றனர். முன்பு அறுவடை முடிந்து வைக்கோல் குன்று போல் கால்நடை வளர்ப்போர் தங்கள் வீடுகளின் பின்புறத்தில் குவித்து வைத்து இருப்பர்.

வைக்கோல்

தற்போது எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதால் சுருள் வடிவில் சுருட்டப்படுகிறது. இதனால் நேரம் மிச்சமாகிறது. இந்த வைக்கோல் சுருளாக கட்ட ஒரு கட்டுக்கு எந்திர வாடகையாக ரூ.35-ம், விவசாயிக்கு ரூ.35-ம் கொடுத்து வியாபாரிகள் எடுத்துச்செல்கின்றனர். இவை பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வைக்கோலை வயலிலேயே விற்பனை செய்து உடனடியாக பணமாக பெற்று கொள்கின்றனர். இதற்கிடையில் சித்திரக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் நெல்லை சாலையில் காயவைத்து பின்னர் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்புகின்றனர். இதனால் தற்போது வரை நாள் ஒன்றுக்கு 500 மூட்டைகள் வீதம் கட்டப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்