மின்னல் தாக்கியதில் வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்

திருவெண்காடு பகுதியில் கனமழை பெய்தது. மின்னல் தாக்கியதில் வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமானது.

Update: 2023-05-02 19:30 GMT

திருவெண்காடு பகுதியில் கனமழை பெய்தது. மின்னல் தாக்கியதில் வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமானது.

கனமழை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இரவு மேற்கண்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

திருவெண்காடு அருகே உள்ள நெப்பத்தூர் அக்ரஹார தெருவில் வசித்து வரும் நாகராஜன் மனைவி லலிதா என்பவர் 500-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளை அங்கு அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் அங்கு மின்னல் தாக்கியதில் வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பூம்புகார் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது.

மின்சாரம் துண்டிப்பு

கனமழை காரணமாக திருவெண்காடு, நாங்கூர், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருவெண்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைத்து, மின் வினியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

பருத்தி விவசாயிகள் கவலை

திடீர் மழையால் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது தான் பருத்தி செடி பூ பூத்து காய் வைக்கும் பருவத்தில் உள்ளது. இந்த நிலையில் பெய்த கனமழையால் பூக்கள் மற்றும் சிறு காய்கள் உதிர்ந்து அழுகக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக மிகவும் வேதனை அடைந்துள்ளோம்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்