பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வைக்கோல் கட்டுகள்

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வைக்கோல் கட்டுகள் கொண்டு செல்லப்படுகின்றன.

Update: 2023-02-14 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வைக்கோல் கட்டுகள் கொண்டு செல்லப்படுகின்றன.

நெல் அறுவடை

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் சரிவர மழை பெய்யாததால் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றிய சோழந்தூர், பத்தனேந்தல், உப்பூர், வெட்டுக்குளம், கொத்தையார்கோட்டை பல கிராமங்களில் சாவியாக உள்ள நெற்பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தீவிரமாகவே நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு வைக்கோல் தனியாகவே ஒவ்வொரு கட்டுகளாக எந்திரம் மூலமாக உருளை வடிவில் சுருட்டப்பட்டு வருகின்றன.

வைக்கோல் அனுப்பும் பணி

இந்த வைக்கோல் கட்டுகளானது தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வைக்கோல் விலை சற்று உயர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் கூறும்போது:-

நல்ல மழை பெய்து தண்ணீர் இருந்தால் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் விளைச்சல் நன்றாக இருந்தால் 35 கட்டு வரை வைக்கோல் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சீசனில் மழையே பெய்யாததால் ஒரு ஏக்கரில் 20 கட்டுகள் வரை தான் வைக்கோல் கிடைத்தது.

கடந்த ஆண்டு ஒரு கட்டு வைக்கோல் 15 ரூபாய்க்கு மட்டுமே விலை போனது. ஆனால் இந்த ஆண்டு ரூ.25 லிருந்து 35 ரூபாய் வரை விலை போகின்றது. இங்கிருந்து சேலம், மணப்பாறை, திருச்சி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் வைக்கோல் கட்டுகள் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்