கர்நாடகா அரசிடம் அமைச்சர் துரைமுருகன் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரோ..? அண்ணாமலை சந்தேகம்

அணை அமைக்க கர்நாடகா முயற்சிப்பதற்கு மத்திய அரசின் மீது சந்தேகமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

Update: 2024-08-03 23:57 GMT

ஈரோடு,

சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம், இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என கர்நாடகா மாநில துணைமுதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

இதற்கு தி.மு.க. அமைச்சர்கள் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் ஒருவர் கூட ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவிரியில் தமிழகத்திற்கான நீரை திறந்துவிட மாட்டோம் என கர்நாடகா தொடர்ந்து விடாப்பிடியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது மழை பெய்ததால் இந்த பிரச்சினையை மக்கள் மறந்துள்ளனர்.

மேகதாது அணை அமைக்க கர்நாடகா முயற்சிப்பதற்கு மத்திய அரசின் மீது சந்தேகமாக உள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். எனக்கும் மூத்த அமைச்சரான துரைமுருகன் மீதும் ஒரு சந்தேகம் வருகிறது. அவர் கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரோ? என்று சந்தேகம் எழுகிறது. கர்நாடகா காங்கிரஸ் அரசு குறித்து தி.மு.க. அரசோ, அமைச்சர்களோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதனால்தான் சந்தேகமாக உள்ளது என்கிறேன். சிவகுமார், சித்தராமையாவை எதிர்க்கும் தைரியமில்லை. எதிர்த்து அறிக்கை விடவில்லை. அவர்கள் செய்வது தவறு என தெரிந்தும், வாய் திறந்து பேசவில்லை" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்