நெல் அறுவடை எந்திரங்கள் வாடகை உயர்வுக்கு இடைத்தரகர்களே காரணம்

நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வசூல் செய்து நெல் அறுவடை எந்திரங்கள் வாடகை உயர்வுக்கு இடைத்தரகர்களே காரணம் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Update: 2023-01-20 21:20 GMT

தஞ்சாவூர், ஜன.21-

நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வசூல் செய்து நெல் அறுவடை எந்திரங்கள் வாடகை உயர்வுக்கு இடைத்தரகர்களே காரணம் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்றுகாலை நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய முடிவு செய்யப்பட்டு, இதுவரை 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய வேண்டும். பொங்கல் விடுமுறைக்கு பண்ருட்டிக்கு சென்ற கரும்பு வெட்டும் தொழிலாளிகளை விரைவாக அழைத்து வந்து வெயில் காலத்திற்கு முன்பாக கரும்பை வெட்ட வேண்டும்.

கக்கரை சுகுமாறன்:- ஒரத்தநாடு தாலுகாவில் நெல் அறுவடை எந்திரங்களை கையாள 15 இடைத்தரகர்கள் உள்ளனர். பல இடங்களில் பெல்ட் வகை எந்திரத்திற்கு மணிக்கு ரூ.2,350-க்கு பதிலாக ரூ.2,800 வரை வசூலிக்கின்றனர். இவற்றில் ரூ.2 ஆயிரம் மட்டுமே உரிமையாளருக்கு செல்கிறது. மீதமுள்ள ரூ.800 இடைத்தரகர்களுக்கு செல்கிறது. இதனால் அறுவடைக்கு வந்த தனியார் நெல் அறுவடை எந்திரங்களை எல்லாம் வேளாண் பொறியியல்துறையில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்கள்

ராயமுண்டான்பட்டி கண்ணன்:- அரசே நெல் அறுவடை எந்திரங்களை அதிகஅளவில் வாங்க வேண்டும். பூதலூர் பகுதியில் இன்னும் 1 வாரத்தில் நெல் அறுவடை பணி தொடங்கிவிடும். இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். சம்பா, தாளடி சாகுபடி பல இடங்களில் தாமதமாக நடைபெற்று இருக்கிறது. இதனால் அடுத்தமாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்.அம்மையகரம் ரவிச்சந்தர்:- பயிர் அறுவடை பரிசோதனையில் அனைத்து விவசாயிகளையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர், லஞ்ச ஒழிப்புத்துறை, போலீஸ்துறை ஆகியோரின் கண்காணிப்பு வளையத்திற்குள் அனைத்து கொள்முதல் நிலையங்களை கொண்டு வர வேண்டும். விதை உளுந்து இருப்பு வைத்து மானிய விலையில் வழங்க வேண்டும்.

உரிய கட்டணம்

ஆம்பலாப்பட்டு தெற்கு தங்கவேல்:- தஞ்சை மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவர்கள் கூடுதல் தொகையை வசூலிக்கின்றனர். எனவே அரசே இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உரிய கட்டணத்தை வசூலித்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும்.பாச்சூர் புண்ணியமூர்த்தி:- ஒரத்தநாடு தாலுகா பாச்சூர் கிராமத்தில் உள்ள ஓடைகுளம், பாச்சேரி அய்யன்குளத்தை தூர்வாரி 4 பக்கமும் கரைகளை அமைத்து தர வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

--------

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு தீர்வு காண கோரி

விவசாயிகள் வெளிநடப்பு-ஆர்ப்பாட்டம்

திருமண்டங்குடி சர்க்கரை ஆலையின் பழைய, புதிய நிர்வாகங்களை கண்டித்து 50 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆதரவாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெளியே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்