அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல் சேகரிக்கும் பணி மும்முரம்

மெலட்டூர் பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு வெளியூர் வியாபாரிகள் வருகையில் வைக்கோல் வியாபாரம் களைகட்டி உள்ளது.

Update: 2023-02-26 18:45 GMT

மெலட்டூர்:

மெலட்டூர் பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு வெளியூர் வியாபாரிகள் வருகையில் வைக்கோல் வியாபாரம் களைகட்டி உள்ளது.

3 போகம் சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். சாகுபடி பணிகளுக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஆண்டு முன் கூட்டியே அணை திறக்கப்பட்டது. அதாவது மே மாதம் அணை திறக்கப்பட்டதால், விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.

குறுவை அறுவடை நேரத்தில் மழை பெய்தது. அதேபோல் சம்பா அறுவடை நேரத்திலும் மழை பெய்ததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழையால் சாய்ந்தன.

அறுவடை

இதனால் ஏற்பட்ட சிரமங்களை கடந்து விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம், மெலட்டூர், திருக்கருகாவூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி செய்து இருந்தனர்.

இந்த பகுதியில் சம்பா, தாளடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை தற்போது எந்திரங்கள் மூலம் அறுவடை செய்து வருகின்றனர்.

வைக்கோல் வியாபாரம்

அறுவடை முடிந்ததும் வயல்களில் கிடந்த வைக்கோலை சேகரித்து விற்பனைக்கு அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. முன்பெல்லாம் வயல்களில் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் வைக்கோல் ஆட்கள் மூலமாக சுருட்டி கட்டி வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் தற்போது அறுவடைக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை போல வைக்கோல் கட்டும் பணிக்கும் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மெலட்டூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வைக்கோலை வாங்கி செல்ல அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் வைக்கோல் வியாபாரம் களை கட்டி உள்ளது.

ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை...

வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வருகை தந்து, வைக்கோலை மொத்தமாக விலைபேசி எந்திரம் மூலம் கட்டுக்கட்டாக கட்டி லாரி மூலம் கொண்டு செல்கின்றனர். வைக்கோல் மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் அறுவடை முடிந்த உடன் வைக்கோலை பத்திரமாக சேமித்து வைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்