கேடு விளைவிக்கும் பார்த்தீனியம் செடிகள்

பார்த்தீனியம் செடிகள் மண் வளத்திற்கும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.

Update: 2022-11-05 19:31 GMT

களைச்செடி

பார்த்தீனியம் என்னும் களைச்செடி 1950-ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டபோது இலவச இணைப்பாக இந்தியாவிற்குள் ஊடுருவி வேர் ஊன்றியது. படிப்படியாக நாடு முழுவதும் பரவி அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துள்ளது. கருவேல மரங்களை அழிக்க முயன்றாலும், மீண்டும் மீண்டும் அவை வளர்வதுபோல், பார்த்தீனியம் செடியும் மிக எளிதாக பரவி வளரக்கூடிய தன்மையை கொண்டுள்ளது.

பார்த்தீனியம் செடி அடிப்படையில் களைச்செடியாக அறியப்பட்டாலும், பல வகையான கேடுகள் நிறைந்த செடியாக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பார்த்தீனியம் செடியை உட்கொள்ளும் கால்நடைகள் மூலம் பெறப்படும் பாலை குடிப்பதால் மனிதர்களுக்கு செரிமான ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த செடியின் இலைகள் மனிதர்கள் மீது படும்போது அரிப்பு மற்றும் தோல் தடிப்பு போன்ற சரும நோய்கள் ஏற்படும்.

மண் வளத்தை பாதிக்கும்

குறிப்பாக பொன் விளையும் பூமியாக இருக்கக்கூடிய விளை நிலங்களின் மண் வளத்தை பாதிக்கக்கூடிய களைச்செடியாக பார்த்தீனியம் உள்ளது. மேலும் டெங்கு கொசு போன்ற நன்னீரில் உருவாகக்கூடிய ஆபத்தான கொசுக்கள் பார்த்தீனியம் செடிகளின் இடையே பதுங்குகின்றன.

இதனால் மனிதர்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் பதுங்கும் கூடாரமாக பார்த்தீனியம் செடி காணப்படுகிறது. மேலும் பல்வேறு கேடுகள் பார்த்தீனியம் செடிகளால் ஏற்படுகிறது.

வேகமாக பரவுகிறது

இதுகுறித்து சோழமாதேவியை சேர்ந்த வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் ராஜாஜோஸ்லின் கூறியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள், வீட்டு தோட்டங்கள், சாலை ஓரங்கள், தெருவோர பகுதிகள் ஆகிய இடங்களில் பார்த்தீனியம் செடிகள் பரவலாக காணப்படுகிறது. இது வேகமாக பரவும் களைச்செடியாகவும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு கேடு விளைவிக்கும் விஷச்செடியாகவும் உள்ளது. குறிப்பாக மனிதருக்கு பார்த்தீனியம் செடியால் தோல் வியாதியும், சுவாச பிரச்சினைகளும் ஏற்படுகிறது. ஒவ்வொரு பார்த்தீனியம் செடியில் இருந்தும் 10 ஆயிரம் விதைகள் உருவாகி காற்றின் மூலம் வேகமாக பரவுகிறது. இதில் உழவியல் முறைப்படி பூ பூப்பதற்கு அல்லது மகரந்தங்கள் உருவாவதற்கு முன் உள்ள இளஞ்செடிகளை கைகளால் வேரோடு பறித்து அகற்றி விடலாம். பூ பூப்பதற்கு முன்பு செடிகளை மக்க செய்வதன் மூலம் விதை பரவுவதை கட்டுப்படுத்தலாம்.

நிலப்போர்வை பரப்புவதன் மூலம் ஒளிச்சேர்க்கை ஏற்பட வாய்ப்பு இல்லாமல் மக்கச்செய்து பார்த்தீனியம் செடிகளை அழித்து விடலாம். மேலும் வேளாண்மை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அப்பகுதிக்கு ஏற்ப ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்தி பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தலாம். நாடு முழுவதும் உள்ள பார்த்தீனியம் செடிகளை அழிப்பதன் மூலம் மண்வளத்தை காப்பதோடு, நோய்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே அந்தந்த பகுதியில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பார்த்தீனியம் செடிகளை கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும், என்றார்.

அப்புறப்படுத்த வேண்டும்

ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், பார்த்தீனியம் செடி ஒழிப்பு என்பது சுகாதார துறையின் நோய் பரவல் தடுப்பு திட்டங்களில் அவசியமான ஒன்றாக உள்ளது. பார்த்தீனியம் செடியை ஒழிக்க அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் செடிகளை வேரோடு பறித்து அப்புறப்படுத்துவது மிகவும் எளிமையான ஒன்று என்பதால், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பணியாளர்களை பார்த்தீனியம் செடி ஒழிப்பு பணிக்கு பயன்படுத்தலாம். மேலும் வீடுகளில் குடியிருப்பவர்கள், அவர்களது வீடுகளுக்கு அருகே தெருவோரமும், வீட்டு தோட்டங்களிலும் இருக்கும் பார்த்தீனியம் செடிகளை முளைக்கும்போதே பறித்து அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலமாக அவர்களுடைய சுகாதாரத்தை பேணி பாதுகாக்க பொதுமக்கள் உதவி செய்கிறார்கள். இந்த விஷயத்தில் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து பார்த்தீனியம் செடி ஒழிப்பில் ஈடுபட வேண்டும், என்றார்.

பார்த்தீனியம் செடிகளை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் சரியான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி மண்வளத்தையும், மனித வளத்தையும் காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்