ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை
குலசேகரம் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஹார்டுவேர்ஸ் உரிமையாளர்
குலசேகரம் அருகே உள்ள நாகக்கோடு வண்டிப்பிலாங்கால விளையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 50). இவருக்கு கரோலின் மலர்(49) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகள் பல் மருத்துவம் படித்துள்ளார். மற்றொரு மகள் துர்கிஸ்தானில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
சுரேஷ்குமார் நாகக்கோடு பகுதியில் இரும்பு, சிமெண்டு உள்பட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் எடைமேடையும் நடத்தி வந்தார்.
தீக்குளித்தார்
இந்தநிலையில் சுரேஷ்குமாரின் தொழிலில் கடந்த சில மாதங்களாக நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டின் முன்பு வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி திடீரென தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
போலீசார் விசாரணை
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுரேஷ்குமாரின் மனைவி கரோலின் மலர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.