விபசாரத்துக்கு செல்லுமாறு தொந்தரவு: ஆட்டோ டிரைவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலி

ஆட்டோ டிரைவர் கொலையில் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2024-03-21 09:51 IST
விபசாரத்துக்கு செல்லுமாறு தொந்தரவு: ஆட்டோ டிரைவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலி

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிஷார் பாட்சா (வயது 45), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிஷார் பாட்சா களரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில், நிஷார் பாட்சா அந்த வீட்டில் திருப்பூரை சேர்ந்த பிரியா (45) என்பவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் கணவரை விட்டு பிரிந்த அவர் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இதையடுத்து அவரையும் விட்டு பிரிந்து வந்து தான் நிஷார் பாட்சாவுடன் பிரியா குடும்பம் நடத்தியது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் திருப்பூருக்கு சென்று பிரியா எங்கே இருக்கிறார்? என்பது தொடர்பாக அவரது கணவர் மற்றும் காதலனிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே அவருடைய செல்போன் டவர் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதற்கிடையில் கள்ளக்காதலி பிரியாவை தனிப்படை போலீசார் சேலத்தில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பிரியா அடிக்கடி வந்துள்ளார். அப்போது அவருக்கும், நிஷார் பாட்சாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர். கடைசியாக தான் அவர்கள் இருவரும் களரம்பட்டி பகுதியில் குடியேறினர்.

நிஷார் பாட்சா வீட்டுக்கு தினமும் குடித்துவிட்டு வந்து பிரியாவுடன் தகராறு செய்துள்ளார். அவரிடம் விபசாரத்துக்கு செல்லுமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சம்பவத்தன்றும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பிரியாவை அவர் அடிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

விபசாரத்திற்கு தன்னை தள்ள முயற்சி செய்வதால் ஆத்திரத்தில் பிரியா அங்கு கிடந்த அம்மிக்கல்லை எடுத்து நிஷார் பாட்சாவின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் பிரியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்