தூத்துக்குடி அருகே 3 நாட்கள் நடந்தது:மாநில அளவிலான சாரண, சாரணியர் இயக்க விழா

தூத்துக்குடி அருகே மாநில அளவிலான சாரண, சாரணியர் இயக்க விழா மூன்று நாட்கள் நடந்தது.

Update: 2023-08-21 18:45 GMT

தூத்துக்குடி அருகே 3 நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான சாரண, சாரணியர் விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநில விழா

மாநில அளவிலான பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் குருளையர் மற்றும் நீலப்பறவையினர்களுக்கான விழா தூத்துக்குடி மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் 3 நாட்கள் நடந்தது. விழாவுக்கு சாரணியர் பிரிவு மாநில உதவி ஆணையர் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர் ஆ.ஜெயா சண்முகம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்கச் செயலாளர் செ.எட்வர்ட் ஜான்சன்பால் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை ஆணையரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான ரெஜினி கலந்து கொண்டு சாரண, சாரணியர் கொடியை ஏற்றினார். சாரண, சாரணியர்கள், குருளையர்கள், நீலப்பறவையினர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பரிசளிப்பு

விழாவில் குருளையர், நீலப்பறவையினருக்கான வரவேற்பு நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம், பாடல்கள், கிராமிய நடனங்கள், குழுநடனம், கைவினைப் பொருட்கள் செய்தல், கடற்கரையோர தூய்மைப்பணி, முகத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தும் படம் வரைதல், காகிதத்தில் உருவங்கள் செய்தல், பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கம், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட குருளையர், நீலப்பறவையினர்கள், சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் மாநில அமைப்பு ஆணையர் கோமதிகண்ணன், மாநில அமைப்பு ஆணையர் சக்திவேல், மாநில பயிற்சி ஆணையர் நாகராஜன், தேசிய பயிற்சியாளர்கள் பூர்ணசந்திரன், வேணுகோபால், சரசவதி, பிரியங்கா, உமாமகேசுவரி, மணிமேகலை, மாவட்ட ஆணையர் சரவணன் மற்றும் மாநிலம் முழுவதும் 14 மாவட்டங்களில் இருந்து பொறுப்பாசியரியர்கள், சாரண, சாரணியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்