12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தமுத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
செரியலூர்-கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர்-கரம்பக்காடு கிராம காவல் தெய்வமாக முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
இதையடுத்து திருவிழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மேலும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும், வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது. தொடந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து மாலை 5 மணிக்கு காய், கனி, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் வாணவேடிக்கைகளுடன், மேள தாளம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்த வாரியும், நாளை (புதன்கிழமை) தெப்ப உற்சவமும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.