அனுமன் ஜெயந்தியைதேசிய பொது விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை
அனுமன் ஜெயந்தியை தேசிய பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா தேசிய தலைவர் ஸ்ரீதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கல்யாண சுந்தர விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ ராம தூத யோக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா தேசிய தலைவர் ஸ்ரீதர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், "தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்று அனுமன் ஜெயந்தி விழாவையும் அரசு தேசிய பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பம் சிறந்த ஆன்மிக குடும்பம். தி.மு.க. அமைச்சர்கள் பலர் இந்து கோவில்களை பராமரித்து வருகின்றனர். எனக்கு பா.ஜ.க.வை விட மோடியை மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் காமராஜரை இழந்தது போல் மோடியை இழந்து விடக்கூடாது. தற்போது சாலை ஓரங்களில் இடையூறாக விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட கோவில்கள்தான் இடிக்கப்படுகிறது. நமது மன்னர்கள் கட்டிய பல கோவில்கள் பராமரிப்பின்றி உள்ளது. அதை நாம் பராமரிக்க வேண்டும்" என்றார்.
பேட்டியின் போது, அனுமன் சேனா மாவட்ட தலைவர் தங்கராஜ், மாநில பொது செயலாளர் ரவிகிருஷ்ணன், மாநில செயலாளர் கார்த்திகேயன், மாநில செய்தி தொடர்பாளர் பத்மஜா முருகையன், இந்து மக்கள் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.