பஸ்சில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பஸ்சில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

Update: 2022-09-29 20:13 GMT

கும்பகோணத்தில் பஸ்சில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

பஸ்சில் தவற விட்ட ரூ.26 ஆயிரம்

கும்பகோணத்தை சேர்ந்தவர் பழனி (வயது 61). இவர், நேற்று பட்டுக்கோட்டையில் ஒரு கோவிலில் நடைபெறும் திருப்பணி வேலையை முடித்துவிட்டு ரூ. 26 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து கொண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துவதற்காக அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த பஸ் மன்னார்குடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது பழனி தான் வைத்திருந்த பையை இருக்கையில் வைத்துவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் வருவதற்குள் பஸ் அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி மன்னார்குடி பஸ் நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்ே்பரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், பழனி வந்த அரசு பஸ்சில் கண்டக்டராக உள்ள கும்பகோணம் அகராதூர் பகுதியை சேர்ந்த முருகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு், இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

உரியவரிடம் ஒப்படைப்பு

இதையடுத்து கண்டக்டர் முருகேசன், பழனி அமர்ந்து வந்த இருக்கையில் சென்று பார்த்த போது பையில் ரூ.26 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை முருகேசன் எடுத்து கொண்டு கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் (இயக்கம்) ராஜ்மோகன் முன்னிலையில் கண்டக்டர் முருகேசன், பழனியிடம் ரூ.26 ஆயிரத்தை ஒப்படைத்தார். பஸ்சில் தவற விட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டர் முருகேசனை போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்