மரணம் அடைந்த கல்லூரி மாணவி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி, மரணம் அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவெறும்பூர், மே.25-
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி, மரணம் அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கல்லூரி மாணவி மரணம்
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியின் மகள் வித்யாலட்சுமி (வயது 19), இவர், திருவெறும்பூர் மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் பகுதிநேரமாக கைலாஷ் நகரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தும் வந்தார்.
கடந்த 17 -ந் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக வித்யாலட்சுமி திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்பு அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவே திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந் தேதி உயிரிழந்தார். விஷம் குடித்ததே அவரது மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காரணம் என்ன?
மாணவி உயிரிழப்பிதற்கு முன்னதாக, பாய்லர் ஆலை போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வலுக்கட்டாயமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி இருந்தார். இதனை அடுத்து தனது மகளின் உயிரிழப்பிற்கு காரணமான 3 பேரையும் கைது செய்யக் கோரி நேற்று முன்தினம் மகளின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவெறும்பூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் தடியடி நடத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து மறியலின் போது, போலீசாரின் வாகனத்தை சேதப்படுத்தியதாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்ப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் 7 பேரை போலீசார் பிடித்து சென்றனர். அதே வேளையில் மாணவி வித்யாலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இந்த நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மாணவி வித்யா லட்சுமியின் உடலை வாங்கி செல்லுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் ஆகியோர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது. மாணவியின் உடலை வாங்கி செல்வதாகவும், அதே வேளையில் போலீசார் பிடியில் உள்ள மாணவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றும் ஊர்த்தலைவர் நிபந்தனை விதித்தார்.
அப்போது போலீஸ் தரப்பில் மாணவி உடலை வாங்கி சென்றதும், மாணவர்களை விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று வித்யா லட்சுமி உடல், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நேற்று மதியம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் மாணவர்கள் 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.