மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மனநல காப்பக பணியை விரைந்து முடிக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலுக்கு சொந்தமான பழனி ராமகிருஷ்ணா விடுதியை மனநல காப்பகமாக மாற்ற முடிவு செய்தது. அதன்படி அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை பார்வையிட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ராமகிருஷ்ணா விடுதி முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, நகர பொருளாளர் கண்ணுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பழனியில் மனநல காப்பக பணியை விரைந்து முடிக்க வேண்டும், தனியாரிடம் உள்ள காப்பகங்களை அரசே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.