மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். காதுகேளாதோர், வாய்பேசாதோர் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சைகை மொழி பெயர்ப்பலகை வைக்க வேண்டும்.மாநிலம் முழுவதும் காதுகேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் தொகுப்பு ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுப் பணிகளில் காதுகேளாத, வாய்பேசாதவர்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி காதுகேளாத, வாய்பேசாதவர்களை பணியில் அமர்த்த வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.