மேல்மலையனூர் பகுதியில்இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழைபொதுமக்கள் மகிழ்ச்சி
மேல்மலையனூர் பகுதியில் இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மேல்மலையனூர் பகுதியில் திடீரென வானில் கரு மேகங்கள் திரண்டன. அடுத்த சில நிமிடங்களில் பலத்த சூறைக்காற்றுடனும், இடி மின்னலுடனும் கனமழை கொட்டியது. சுமார் 30 நிமிடம் இடைவிடாமல் பெய்த இந்த மழையின்போது அவலூர்பேட்டை, வளத்தி, மேல்மலையனூர் பகுதிகளில் ஆலங்கட்டிகள் விழுந்தன. இதைபார்த்த அப்பகுதி சிறுவர்கள் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். கடந்த சில வாரங்களாக கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த இப்பகுதி மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.