ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட3 பேருக்கு வாந்தி-மயக்கம்
செய்யாறில் உள்ள ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடனர்.;
செய்யாறு
செய்யாறில் உள்ள ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடனர்.
'சிக்கன் லாலி பாப்'
செய்யாறு தாலுகா ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பார்த்திபன், ரமேஷ், பாரதி. நண்பர்களான இவர்கள் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு செய்யாறு புதிய காஞ்சீபுரம் சாலையில் மருத்துவமனை எதிரே செயல்பட்டுவரும் ஒரு அசைவ உணவகத்தில் 'சிக்கன் பிரைட்ரைஸ்', 'சிக்கன் லாலிபாப்'், தந்தூரி சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் இரவு 3 பேருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து 3 பேரும் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக உடல் உபாதை ஏற்பட்டுள்ளதை அறிந்து மருத்துவமனையில் 3 பேரையும் உள் நோயாளியாக அனுமதித்தனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளித்தும் உடல் நிலை குறித்து தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே நாளன்று செய்யாறு பாரி நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரும் அதே உணவகத்தில் சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் சம்பவங்கள்
ஏற்கனவே ஆரணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரணியில் உள்ள அசைவ உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதில் உயிரிழப்பும் நிகழ்ந்தது. இதேபோல் நாமக்கல்லில் உள்ள ஓட்டலில் ஷவர்மா உணவசு சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.
எனவே அசைவ ஓட்டலில் சரியான உணவு சமைக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.